பக்கம் எண் :

உட்பகை அஞ்சித்தற் காக்க வுலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.

 

உட்பகை அஞ்சித் தற்காக்க - உட்பகைவர்க்கு அஞ்சித் தன்னைக் காத்துக்கொள்க; உலைவிடத்து மட்பகையின் மாணத்தெறும்- ஏனெனின், அங்ஙனங் காவாவிடின், தனக்குத் தளர்ச்சி வந்த விடத்து, அவர் பகை குயவன் மட்கலத்தை யறுக்குங் கருவி அதனை யறுப்பதிலும் மிகுதியான அளவு தன்னைக் கெடுத்துவிடும்.

'காத்தல்' அவரொடும் அவரொடு சேர்ந்தாரொடும் எவ்வகைத் தொடர்புமின்றியிருத்தல். மண்ணைப் பகுக்குங்கருவி 'மட்பகை' அறியப்படாது உள்ளிருந்தே கெடுத்தலால் கேட்டினின்று தப்பமுடியா தென்பதாம்.

'மட்பகையின் மாணத்தெறும்' என்பதற்கு "கரை படக்கட்டிய மண் உறுதிக்கு ஒரு தளர்ச்சி வந்த இடத்து மற்று அதனை முழுவதும் முரித்து எறியும் வெள்ளம்போல், இதுவும் தன் குடி முழுதும் குலைத்து எறிந்துவிடும் என்றவாறு..... மண்பகை என்பது நீர் வெள்ளம் என்றது." என்பது காலிங்கர் உரை.