பக்கம் எண் :

செப்பின் புணர்ச்சிபோற் கூடினுங் கூடாதே
யுட்பகை யுற்ற குடி.

 

உட்பகை உற்ற குடி - உட்பகை யுண்டான குடியார்; செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் - செப்பும் அதன் மூடியும் பொருந்தினாற்போல வேற்றுமை தெரியாது புறத்திற் கூடினாராயினும்; கூடாதே - அகத்தில் தம்முட் கூடாதவரேயாவர்.

"உட்பகையால் மனம் வேறுபட்டமையிற் புறப்பகை பெற்றுழிவீற்று வீற்றாவரென்பதாம். குடி கூடாதென்பதனை நாடு வந்ததென்பதுபோலக் கொள்க. உட்பகை தானுற்ற குடியோடு கூடாதென்றும் உட்பகையுண்டாய குடி அப்பகையோடு கூடாதென்றும் உரைப்பாரு முளர்." என்று பரிமேலழகர் கூறியிருப்பதினின்று, அவர் இங்கு உட்பகையை ஒற்றுமையின்மையெனக்கொண்டதாகத் தெரிகின்றது. பகைவருக்குத் தம் குடும்பத்தை அல்லது இனத்தைக் காட்டிக் கொடுக்கும் உட்பகைவேறு ; அங்ஙனங் காட்டிக்கொடாது தமக்குள்ளேயே கருத்துவேறுபாட்டால் ஒற்றுமையின்றியிருக்கும் பிளவுநிலை அல்லது பிரிவினை வேறு. உட்பகையுற்ற குடிக்கு உவமமாகக் கூறப்பட்டுள்ள செப்பின் புணர்ச்சியிற் செப்பும் மூடியுமாக இரு பகுதிகளிருப்பதையும், இவ்வதிகார முகவுரையில், புறப்பகைக்கு இடனாக்கிக் கொடுத்து அது வெல்லுந் துணையும் உள்ளாய் நிற்கும் பகை. என்று பரிமேலழகரே உட்பகைக்கு இயல்வரையறை கூறியிருப்பதையும், நோக்குக. ஏகாரம் தேற்றம். பேராயக்கட்சித் தமிழர் பொதுவிழாக்களில் நேர்பாட்டுக் கட்சித் தமிழரொடு கூடிக்கொள்ளினும், இந்தியார்க்குத் தம் இனத்தைக் காட்டிக் கொடுப்பதிலேயே முனைந்திருப்பது, இக்குறட்குச் சிறந்த எடுத்துக்காட்டாம்.