அற்றது அறிந்து - முன்னுண்டது செரித்த நிலைமையை அறிந்து; துவரப் பசித்து-முற்றப் பசித்தபின்; மாறுஅல்ல கடைபிடித்துத் துய்க்க- உடற்கூறு பருவம் விருப்பம் காலம் இடம் முதலியவற்றோடு மாறுகொள்ளாதனவும், மணஞ்சுவை வலிமைகளால் மாறுகொள்ளாதனவுமான, உணவுகளைக் குறிக்கொண்டு உண்க. 'அற்றது போற்றி'(642)என்றும், 'அற்றாலளவறிந்து (343) என்றும், முன்பு இருமுறை கூறியதோ டமையாது மீண்டும் இங்கு 'அற்ற தறிந்து' என்றது, செரிமானத்தின் இன்றியமையாமையை வலியுறுத்தற் பொருட்டாம். ஆசிரியர் இதை முதன்மையாகக் கொண்டதினாலேயே, இன்பத்துப்பாலில் உலகிற் சிறந்த இன்பத்தைக் கூறுமிடத்தும், " உணலினும் உண்ட தறலினிது காமம் புணர்தலி னூட லினிது", என உவமமாகக் கூறியிருத்தல் காண்க. உண்டது செரித்த பின்பும் அதன் சுவையும் மணமும் சற்று நேரம் நிற்குமாதலின் , 'துவரப்பசித்து' என்றார். பசித்தல் என்னுஞ் சினைவினை இங்கு முதல் வினையாக நின்றது. ஊதை பித்த கோழைகளை மிகுப்பனவும் குறைப்பனவுமாக உணவுகள் உடற் கூற்றோடும், இளமைக்குரிய வுணவுகளை முதுமையிலுண்பது பருவத்தொடும், அருவருப்பான தோற்றமும் நாற்றமுமுள்ள வுணவுகள் விருப்பத்தொடும், கோடைக்குரிய வுணவை மாரிநாளிலும் காலைக்குரிய வுணவை மாலையிலும் உண்பது பெரும்பொழுதும் சிறுபொழுதுமான காலத்தொடும், வெப்பநாட்டிற்குரிய வுணவைக் குளிர் நாட்டிலுண்பது இடத்தொடும், மாறுகொள்வனவாம். தேனும் நெய்யும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல்வன சுவை வலிமைகளால் மாறு கொள்வனவாம். அறுசுவைகளுள், துவர்ப்பையும் புளிப்பையும் ஊதைக் கூற்றோடும், உவர்ப்பையும் கைப்பையும் பித்தக் கூற்றோடும், இனிப்பையும் கார்ப்பையும், கோழைக் கூற்றோடும், தொடர்புபடுத்திக் கூறுவர் மருத்துவர். ஒரே சுவையுள்ள காய்கனிகள் நேர்மாறான குணஞ்செய்வதாலும், ஒரே கனி வேறுபட்ட வளர்ச்சி நிலையிலும் வேறுபட்ட நிலத்தாலும் வேறுபட்ட காலத்தாலும் சுவை வேறுபடுதலாலும், சுவையை மட்டும் நோக்காது பொருளையும் நோக்கி, ஏற்பதும் ஏற்காததும் அறிந்து கொள்வதுங் தள்ளுவதுஞ் செய்தல் வேண்டும். அயலிடங்களில் உடற்கூறு முதலியவற்றோடு மாறுகொள்ளும் உணவுகளை உண்ண நேரினுங் , அவற்றிற்குரிய மாற்றுக்களை உடனே உண்டுவிடுவது நோய் வராமல் தடுக்கும் முற்காப்பாம் ஒவ்வோருணவுப் பொருளிலும் சிற்றளவாகவோ பேரளவாகவோஒவ்வொரு குற்றமிருந்தாலும், ஒருவ ருடற்கொத்தது இன்னொருவருடற் கொவ்வாமையாலும், பித்தத்தையுங் காய்ச்சலையும் நீக்கினும் தாது வளர்ச்சியைக் குறைக்கும் இஞ்சி சுக்குபோல ஒன்றிற்காவது இன்னொன்றிற் காகாமையானும், அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாதலாலும், எல்லாவற்றின் இயல்பையும் உரையளவையால் அல்லது பட்டறிவாலறிந்து, எல்லா நிலைமைக்கும் ஏற்ப உடம்பிற்கொத்த வுணவை அளவாகவுண்டு நோயின்றி இன்புறுக என்பார். 'கடைப் பிடித்து மாறல்ல துய்க்க' என்றார். இக்குறளால் ஒத்த வுணவை நன்றாய்ப் பசித்த பின்னரே யுண்ணவேண்டு மென்பது கூறப்பட்டது. |