மாறுபாடு இல்லாத உண்டி- உடற்கூறு முதலியவற்றோடு மாறுகொள்ளாத உணவை; மறுத்து உண்ணின்- ஒருவன் தன் விருப்பத்திற்கு இடங்கொடாது மேலும் இரு கவளத்திற்கு வயிற்றில் இடமிருக்குமளவு குறைத்து உண்பானாயின்; உயிர்க்கு ஊறுபாடு இல்லை- அவனுயிர்க்கு நோயினால் துன்பமுறுதல் இராது. செரிமானத்தைப்போன்றே ஒத்த வுணவை யுண்பதும் இன்றியமையாத தாதலின், 'மாறல்ல' என்று மேற்கூறியதையே இங்கு 'மாறுபாடில்லாத வுண்டி' என்று வழிமொழிந்தார். மறுத்தலென்பது நிரம்பவுண்ண வேண்டுமென்னும் ஆசைக்கிணங்காமை. 'உண்ணின்' என்பது அதன் அருமை தோன்ற நின்றது. (943) -ஆம் குறளில் 'அளவறிந் துண்க' என்றதனை இங்கு 'மறுத்துண்க' என வரையறுத்தார். ஊறு என்பது தேர்ச்சி. அது இங்கு வழக்குப் பற்றித் துன்ப நேர்ச்சியைக்குறித்தது. இங்குக் குறித்த துன்பம் நோய். ஊறுவது ஊறு; படுவது பாடு என்பது போல; துன்பமுறுவது உயிரேயாதலின் அதன்மேல் வைத்துக் கூறப்பட்டது. ஒத்த வுணவையும் ஒரு சிறிது குறைத் துண்டல் நன்றென்பதாம்.
|