ஒருமை மகளிரே போல - ஒரே கணவனைக் காதலித்துத் தம் கற்பைக் காத்துக் கொள்ளும் குல மகளிர் போல; தன்னைத் தான் கொண்டொழுகின்- ஓர் ஆடவனும் ஒரே மனைவியைக்,காதலித்து தன் கற்பைக் காத்துக் கொண்ட போதே; பெருமையும் உண்டு- பெருமைக் குணமும் அவனிடத்தில் உளதாகும். இதனால் கற்பென்பது இருபாற்கும் பொது வென்பதும், அது பெருமை பெறும் பெண்பாற்குப் போன்றே ஆண்பாற்கும் இன்றிமையாத தென்பதும், பெறப்பட்டன. இன்பத்தைச் சிறப்பாகக் கொண்ட அகப்பொருள்(இலக்கண) நூலார்க்கும் அறத்தைச் சிறப்பாகக் கொண்ட அறநூலார்க்கும் உள்ள கருத்து வேறுபாடும் இதனால் அறியப்படும். உம்மை எச்சவும்மை. "அடங்காத் தானை வேந்த ருடங்கியைந் தென்னொடு பொருது மென்ப வவரை ஆரம ரலறத் தாக்கித் தேரொ டவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த பேரம ருண்க ணிவளினும் பிரிக." என்னும் பூதப்பாண்டியன் வஞ்சினமும (புறம் 71) "பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீமம் நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம் பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற வள்ளித ழவிழ்ந்த தாமரை. நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே," (புறம் 246) என்னும் அவன் தேவியின் பாலை நிலைக் கூற்றும், இங்குக் கவனிக்கத் தக்கன. இக்குறளாற் பெருமைக் கின்றியமையாத துணைப் பண்பு கூறப்பட்டது.
|