பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்-குடி

அதிகாரம் 100. பண்பு உடைமை.

அஃதாவது, சான்றாண்மையை மேற்கொண்டு நின்றே அவரவர்பண்பறிந்து அறிதற்கேற்றவாறு ஒழுகுதல், "பண்பெனப்படுவது பாடறிந்தொழுகல்", என்றார் நல்லந்துவனார் (கலித் 133), அதிகார முறைமையும் இதனால் விளங்கும்.

 

எண்பதத்தா லெய்த லெளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை யென்னும் வழக்கு.

 

யார்மாட்டும் எண்பதத்தால் - எல்லாரிடத்தும் எளிய செல்வியராயிருத்தலால்; பண்புடைமை என்னும் வழக்கு எய்தல் எளிது என்ப - பண்புடையராய் ஒழுகும் நெறியை எளிதாயடையலாமென்று கூறுவர் அறநூலார்.

நற்குணங்கள் நிறைந்து எளிய செவ்வியராகவு மிருப்பின், பண்புடைமைதானே யுண்டாகுமாதலின், 'எண்பதத்தா லெய்த லெளி தென்ப ' என்றார். எளிய செவ்வியாவது, எளிதாய்க் கண்டுரையாடற்கேற்ற நிலைமை. 'என்ப' என்றதனால், திருக்குறட்கு முன்பும் தமிழற நூல்கள் இருந்தமை யறியப்படும்.