கொடி முந்திரிப் பழத்தை (அது தனக்குக் கிட்டாதென்பதால்) மறக்க விரும்பிய நரி அதற்காக அதை வெறுக்க முயன்று, சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று கூறிய காரணத்தைப் போலவே பெண்ணின்பத்தை மறக்க விரும்பியவர்கள் அதை மறக்க முடியாமையால் வெறுக்கத் தொடங்கி அதற்காகவே பெண்ணை இழித்தும் பழித்தும் கற்பித்துப் பேசத் தொடங்கினர். இச் செயல் நாலடியார் போன்ற இலக்கியங்களில் பரவலாக இடம் பெற்றுள்ளது. அக்கருத்துக்காட்பட்ட பரிமேலழகர் போன்ற உரையாசிரியர்களும் திருவள்ளுவரின் கருத்துக்கு மாசு விளையாமல் உரையெழுத இயலாதோராயினர். அதன் விளைவே பெண்வழிச் சேறல் என்னும் அதிகாரக் குறள் பத்துக்கும் அவர்களால் தரப்பட்ட விளக்கமாக நிலைத்து விட்டது. திருவள்ளுவரின் கோட்பாட்டில் கோணல் ஏற்படுத்தும் இப்போக்கினை மாற்ற விரும்பிய கலைஞரின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். |