பக்கம் எண் :

திருக்குறள்79பொருள்

40. கல்வி
 

391.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

 

பிழை    இல்லாதவற்றைத்     தனது   குறைகள்    நீங்குமளவுக்குக்
கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.
 

392.

எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

 

எண்ணும்   எழுத்தும்  எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே,
உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.
 

393.

கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.

 

கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே
கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண்  இருப்பினும்  அது  புண்   என்றே
கருதப்படும்.
 

394.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்

 

மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து  பழகுவதும்,   பிரிந்திட  நேரும் போது
மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.
 

395.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர்.

 

அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல்  தாழ்ந்து  நின்று, மேலும்
கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக்  கற்றுக்கொள்ளாதவர்கள் கடைநிலை
மாந்தராகக் கருதப்படுவார்கள்.