பக்கம் எண் :

திருக்குறள்81பொருள்

41. கல்லாமை
 

401.

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கொளல்.

 

நிறைந்த  அறிவாற்றல்  இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான
கட்டம்  போட்டுக்   கொள்ளாமலே   சொக்கட்டான்   விளையாடுவதைப்
போன்றதாகும்.
 

402.

கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற் றற்று.

 

கல்லாதவனின்    சொல்கேட்க      விரும்புவது,  மார்பகம்  இல்லாத
பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.
 

403.

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லா திருக்கப் பெறின்.

 

கற்றவர்களின், முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால்
கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.
 

404.

கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்

கொள்ளார் அறிவுடை யார்.

 

கல்வி  கற்காதவனுக்கு  இயற்கையாகவே   அறிவு    இருந்தாலும்கூட,
அவனைக் கல்வியில்  சிறந்தோன்  என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள
மாட்டார்கள்.
 

405.

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

சொல்லாடச் சோர்வு படும்.

 

கல்வி   யறிவில்லாதவர்கள்   தங்களைப் பெரிய மேதைகளைப் போல்
காட்டிக் கொள்ளும்  போலி  வேடம்,  கற்றுத்   தேர்ந்த  அறிஞர்களிடம்
அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.