பக்கம் எண் :

திருக்குறள்87பொருள்

44. குற்றங்கடிதல்
 

431.

செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து.

 

இறுமாப்பு,      ஆத்திரம்,     இழிவான   நடத்தை      இவைகள்
இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.
 

432.

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா

உவகையும் ஏதம் இறைக்கு.

 

மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும்  செயல்களில்
மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.
 

433.

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்

கொள்வர் பழிநாணு வார்.

 

பழிக்கு   நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக்
கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.
 

434.

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

அற்றந் தரூஉம் பகை.

 

குற்றம்  புரிவது   அழிவை  உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால்
குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
 

435.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.

 

முன்கூட்டியே  எச்சரிக்கையாக  இருந்து   ஒரு  தவறான   செயலைத்
தவிர்த்துக் கொள்ளாதவருடைய  வாழ்க்கையானது  நெருப்பின்  முன்னால்
உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.