பக்கம் எண் :

திருக்குறள்93பொருள்

47. தெரிந்து செயல்வகை
 

461.

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.

 

எந்த   அளவுக்கு  நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று
விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறகே ஒரு செயலில் இறங்க வேண்டும்.
 

462.

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்

கரும்பொருள் யாதொன்று மில்.

 

தெளிந்து  தேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை
ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை.
 

463.

ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை

ஊக்கா ரறிவுடை யார்.

 

பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும்  இழந்து
விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.
 

464.

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்

ஏதப்பா டஞ்சு பவர்.

 

களங்கத்துக்குப்  பயப்படக்  கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப்
பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.
 

465.

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்

பாத்திப் படுப்பதோ ராறு.

 

முன்னேற்பாடுகளை  முழுமையாக  ஆராய்ந்து  செய்யாமல் பகைவரை
ஒடுக்க  முனைவது  அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும்
வழியாக ஆகிவிடும்.