பக்கம் எண் :

அரசியல்94கலைஞர் உரை

466.

செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்.

 

செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச்
செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்.
 

467.

எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்

எண்ணுவ மென்ப திழுக்கு.

 

நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய  பிறகு
சிந்திக்கலாம் என்பது தவறு.
 

468.

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று

போற்றினும் பொத்துப் படும்.

 

எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத
முயற்சி இறுதியில் முடங்கிப் போய் விடும்.
 

469.

நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்

பண்பறிந் தாற்றாக் கடை

 

ஒருவருடைய   இயல்பைப்  புரிந்து  கொண்டுதான் நன்மையைக் கூடச்
செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.
 

470.

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு

கொள்ளாத கொள்ளா துலகு.

 

தம்முடைய   நிலைமைக்கு    மாறான    செயல்களை   உயர்ந்தோர்
பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே
செய்திடல் வேண்டும்.