பக்கம் எண் :

திருக்குறள்95பொருள்

48. வலியறிதல்
 

471.

வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியுந் தூக்கிச் செயல்.

 

செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும்
துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே  அந்தச்
செயலில் ஈடுபட வேண்டும்.
 

472.

ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்

செல்வார்க்குச் செல்லாத தில்.

 

ஒரு  செயலில்  ஈடுபடும்போது  அச்செயலைப் பற்றிய அனைத்தையும்
ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.
 

473.

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்.

 

தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு
செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.
 

474.

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும்.

 

மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும்,
தன்னைத்  தானே  பெரிதாக  விளம்பரப்  படுத்திக்  கொண்டிருப்பவர்கள்
விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.
 

475.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

சால மிகுத்துப் பெயின்.

 

மயில்  இறகாக  இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின்
அச்சு முரிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.