பக்கம் எண் :

அரசியல்96கலைஞர் உரை

476.

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்

உயிர்க்கிறுதி ஆகி விடும்.

 

தன்னைப்  பற்றி  அதிகமாகக்  கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை
மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு  மேலும்  ஏறிட
முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.
 

477.

ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்

போற்றி வழங்கு நெறி.

 

வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச்
சீராகக் காத்து வாழும் வழியாகும்.
 

478.

ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை

போகா றகலாக் கடை.

 

எல்லை  கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக
இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.
 

479.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்.

 

இருப்பது,   இயற்றக்கூடியது,  இனியும்  ஈட்டக்கூடியது  ஆகியவற்றின்
அளவு  அறிந்து     செயல்திட்டங்களை     வகுத்துக்கொள்ளாவிட்டால்,
வலிமையோ அல்லது   வளமோ   இருப்பது  போல்  தோன்றினாலும்கூட
இல்லாமல் மறைந்து போய்விடும்.
 

480.

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை

வளவரை வல்லைக் கெடும்.

 

தன்னிடமுள்ள    பொருளின்    அளவை  ஆராய்ந்து   பார்க்காமல்
அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது  வளம்  விரைவில்
கெடும்.