49. காலமறிதல் |
481. | பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும் |
| வேந்தர்க்கு வேண்டும் பொழுது. |
|
பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். |
482. | பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத் |
| தீராமை ஆர்க்குங் கயிறு. |
|
காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும். |
483. | அருவினை யென்ப உளவோ கருவியாற் |
| கால மறிந்து செயின். |
|
தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை. |
484. | ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம் |
| கருதி இடத்தாற் செயின். |
|
உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும். |
485. | காலங் கருதி இருப்பர் கலங்காது |
| ஞாலங் கருது பவர். |
|
கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள். |