486. | ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் |
| தாக்கற்குப் பேருந் தகைத்து. |
|
கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும். |
487. | பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த் |
| துள்வேர்ப்பர் ஒள்ளி யவர். |
|
பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல். |
488. | செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை |
| காணிற் கிழக்காந் தலை. |
|
பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும். |
489. | எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே |
| செய்தற் கரிய செயல். |
|
கிடைப்பதற்கு அரிய காலம் வாய்க்கும்போது அதைப் பயன்படுத்திக்கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும். |
490. | கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் |
| குத்தொக்க சீர்த்த இடத்து. |
|
காலம் கைகூடும் வரையில் கொக்குப்போல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும். |