பக்கம் எண் :

திருக்குறள்101பொருள்

51. தெரிந்து தெளிதல்
 

501.

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறந்தெரிந்து தேறப் படும்.

 

அறவழியில்     உறுதியானவனாகவும்,     பொருள்       வகையில்
நாணயமானவனாகவும், இன்பம்  தேடி  மயங்காதவனாகவும்,  தன்னுயிருக்கு
அஞ்சாதவனாகவும்  இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த
வேண்டும்.
 

502.

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்

நாணுடையான் கட்டே தெளிவு.

 

குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும்
இருப்பவனையே   உயர்குடியில்   பிறந்தவன்  எனத்  தெளிவு   கொள்ள
வேண்டும்.
 

503.

அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்

இன்மை அரிதே வெளிறு.

 

அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும்  அற்றவர்  என்றும்
புகழப்படுவோரைக்கூட ஆழமாக  ஆராய்ந்து  பார்க்கும்போது  அவரிடம்
அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்து விட இயலாது.
 

504.

குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.

 

ஒருவரின்  குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து
அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன்  பிறகு
அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.
 

505.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங்

கருமமே கட்டளைக் கல்.

 

ஒருவர்   செய்யும்  காரியங்களையே  உரைகல்லாகக் கொண்டு, அவர்
தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.