| 506. | அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் |
| பற்றிலர் நாணார் பழி. |
| |
நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள். |
| 507. | காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் |
| பேதைமை எல்லாந் தரும். |
| |
அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும். |
| 508. | தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை |
| தீரா இடும்பை தரும். |
| |
ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக்கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும். |
| 509. | தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின் |
| தேறுக தேறும் பொருள். |
| |
நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பி விடக் கூடாது. |
| 510. | தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும் |
| தீரா இடும்பை தரும். |
| |
ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக்கொண்ட பின் அவரைச் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும். |