52. தெரிந்து வினையாடல் |
| 511. | நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த |
| தன்மையான் ஆளப் படும். |
| |
நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்து, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள். |
| 512. | வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை |
| ஆராய்வான் செய்க வினை. |
| |
வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன். |
| 513. | அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் |
| நன்குடையான் கட்டே தெளிவு. |
| |
அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம். |
| 514. | எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் |
| வேறாகும் மாந்தர் பலர். |
| |
எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர். |
| 515. | அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான் |
| சிறந்தானென் றேவற்பாற் றன்று. |
| |
ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறோருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈடுபடுத்தக் கூடாது. |