பக்கம் எண் :

திருக்குறள்105பொருள்

53. சுற்றந் தழால்
 

521.

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்

சுற்றத்தார் கண்ணே உள.

 

ஒருவருக்கு  வறுமை   வந்த  நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப்
பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.
 

522.

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா

ஆக்கம் பலவுந் தரும்.

 

எந்த   நிலைமையிலும்   அன்பு   குறையாத   சுற்றம்   ஒருவருக்குக்
கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக்  கூடியதாக
அமையும்.
 

523.

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்

கோடின்றி நீர்நிறைந் தற்று.

 

உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து  மகிழ்ந்து
பழகாதவனுடைய     வாழ்க்கையானது;    கரையில்லாத   குளத்தில்  நீர்
நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்.
 

524.

சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்

பெற்றத்தாற் பெற்ற பயன்.

 

தன்    இனத்தார், அன்புடன் தன்னைச்   சூழ்ந்து   நிற்க    வாழும்
வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்.
 

525.

கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய

சுற்றத்தாற் சுற்றப் படும்.

 

வள்ளல்     தன்மையும்,  வாஞ்சைமிகு   சொல்லும்    உடையவனை
அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.