526. | பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் |
| மருங்குடையார் மாநிலத் தில். |
|
பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம். |
527. | காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் |
| அன்னநீ ரார்க்கே உள. |
|
தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும். அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு. |
528. | பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் |
| அதுநோக்கி வாழ்வார் பலர். |
|
அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர். |
529. | தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் |
| காரண மின்றி வரும். |
|
உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள். |
530. | உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் |
| இழைத்திருந் தெண்ணிக் கொளல். |
|
ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய், மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும். |