பக்கம் எண் :

திருக்குறள்107பொருள்

54. பொச்சாவாமை
 

531.

இறந்த வெகுளியின் தீதே சிறந்த

உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

 

அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத  சினத்தினால்  ஏற்படும்
விளைவை விடத் தீமையானது.
 

532.

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை

நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.

 

நாளும்  தொடர்ந்து  வாட்டுகின்ற  வறுமை, அறிவை அழிப்பது போல
மறதி, புகழை அழித்து விடும்.
 

533.

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்

தெப்பானூ லோர்க்குந் துணிவு.

 

மறதி  உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும்
கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.
 

534.

அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை

பொச்சாப் புடையார்க்கு நன்கு.

 

பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச்  சுற்றிப்  பாதுகாப்புக்கான
அரண்  கட்டப்பட்டிருந்தாலும்  எந்தப்  பயனுமில்லை.  அதைப் போலவே
என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த
நிலையினால் எந்தப் பயனுமில்லை.
 

535.

முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை

பின்னூ றிரங்கி விடும்.

 

முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக்   காத்துக்  கொள்ளத் தவறியவன்,
துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்.