பக்கம் எண் :

13

கூறலாம். ஊழ், விதி, தலை எழுத்து, கர்மா  என்றெல்லாம்  சொல்லப்படும்
ஒரு  கற்பனைத்   தத்துவம்   பற்றிய  குறட்பகுதிக்கு  உரையாசிரியர்கள்
குழப்பந்தரும்   உரைகளையே  எழுதிச்  சென்றனர்.  பகுத்தறிவாளராகிய
கலைஞர் ஊழ் என்னும் அதிகாரத்திற்குத்  தெளிவானதொரு விளக்கத்தைத்
தந்திருப்பதோடு இக்  கருத்துப்  பற்றிய  மாந்தரின்  குழப்பம்,  அதனால்
ஏற்படும் அச்சம், கவலை,  கையறுநிலை  ஆகிய  அனைத்துக்கும்  தீர்வும்
காட்டியுள்ளார்.
 

ஊழ் என்பதற்குக் கலைஞர் இயற்கை நிலை என்று பொருள்  தருகிறார்.
இயற்கை நிலை என்பதற்கு இயற்கையின்  அமைதி,  அஃதாவது  இயற்கை
அமைந்திருக்கும் விதம் என்பது விளக்கமாகும்.
 

இயற்கை  வலிமையானது.  வலிமையாக  இருப்பதனால் தான் இயற்கை
நிலைத்தும்  உள்ளது. அதனை  உணர்ந்து  அதற்கேற்ப  நடந்து கொள்ள
வேண்டுமென்பதே  ஊழ்  என்னும்   அதிகாரத்தில்   இடம்   பெற்றுள்ள
வள்ளுவரின்  கருத்து  என்பதைக்   கலைஞர்   தம்  உரையில் எடுத்துக்
காட்டுகிறார்.
 

இயற்கையின்  ஆற்றல்   மிகுதிக்குக் "கூரிய  அறிவு  வழங்கக்  கூடிய
நூல்களை  ஒருவர்  கற்றிருந்த  போதிலும்  அவரது   இயற்கை  அறிவே
மேலோங்கி  நிற்கும்   "என்னும்    உரை   சான்று   தருகிறது.  மேலும்
"இயற்கை  நிலையை  மாற்றி  மற்றொரு  செயற்கை நிலையை அமைத்திட
முனைந்தாலும்,  இயற்கை    நிலையே   முதன்மையாக  வந்து  நிற்பதால்
அதைவிட வலிமையானவையாக வேறு எவை உள்ளன" என்பதும்  காணத்
தகும்.
 

ஊக்கம் ஆக்கம் தரும் என்பதும்,  சோம்பல்  அழிவு  தரும் என்பதும்
இயற்கையின்  உண்மையே. நல்லவை  தீயவாதலும், தீயவை  நல்லவாதலும்
இயற்கையே.