பக்கம் எண் :

திருக்குறள்109பொருள்

55. செங்கோன்மை
 

541.

ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை.

 

குற்றம்    இன்னதென்று   ஆராய்ந்து   எந்தப்   பக்கமும்  சாயாமல்
நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.
 

542.

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோனோக்கி வாழுங் குடி.

 

உலகில்   உள்ள  உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல
ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.
 

543.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்.

 

ஓர்  அரசின்  செங்கோன்மைதான்  அறவோர் நூல்களுக்கும் அறவழிச்
செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்.
 

544.

குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு.

 

குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை
நானிலமே போற்றி நிற்கும்.
 

545.

இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட

பெயலும் விளையுளுந் தொக்கு.

 

நீதி   வழுவாமல்   ஓர்   அரசு   நாட்டில் இருக்குமேயானால் அது,
பருவகாலத்தில்   தவறாமல்   பெய்யும் மழையினால் வளமான விளைச்சல்
கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.