546. | வேலன்று வென்றி தருவது மன்னவன் |
| கோலதூஉங் கோடா தெனின். |
|
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான். |
547. | இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை |
| முறைகாக்கும் முட்டாச் செயின். |
|
நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும். |
548. | எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் |
| தண்பதத்தான் தானே கெடும். |
|
ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும். |
549. | குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் |
| வடுவன்று வேந்தன் தொழில். |
|
குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும். |
550. | கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் |
| களைகட் டதனொடு நேர். |
|
கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும். |