பக்கம் எண் :

திருக்குறள்113பொருள்

57. வெருவந்த செய்யாமை
 

561.

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

ஒத்தாங் கொறுப்பது வேந்து.

 

நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும்
அவை நிகழா  வண்ணம்  அக்குற்றங்களுக்கேற்பத்  தண்டனை  கிடைக்கச்
செய்வதே அரசின் கடமையாகும்.
 

562.

கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்

நீங்காமை வேண்டு பவர்.

 

குற்றங்கள்   நிகழாமல்   இருக்கக்  கண்டிக்கும்போது கடுமை காட்டித்,
தண்டிக்கும்    போது    மென்மை   காட்டுகிறவர்களின் செல்வாக்குதான்
தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.
 

563.

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

 

குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக
விரைவில் அழியும்.
 

564.

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்

உறைகடுகி ஒல்லைக் கெடும்.

 

கடுஞ்சொல்   உரைக்கும்   கொடுங்கோல்   என்று  குடி   மக்களால்
கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்.
 

565.

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

பேஎய்கண் டன்ன துடைத்து.

 

யாரும்  எளிதில்  காண  முடியாதவனாகவும், கடுகடுத்த  முகத்துடனும்
இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம்  எனப்படும்
அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.