566. | கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் |
| நீடின்றி ஆங்கே கெடும். |
|
கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்து விடும். |
567. | கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன் |
| அடுமுரண் தேய்க்கும் அரம். |
|
கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும். |
568. | இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் |
| சீறிற் சிறுகுந் திரு. |
|
கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும். |
569. | செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் |
| வெருவந்து வெய்து கெடும். |
|
முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும். |
570. | கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல |
| தில்லை நிலக்குப் பொறை. |
|
கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்குப் பக்க பலமாக்கிக் கொள்ளும், அதைப்போல் பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை. |