"ஒருவர் தமக்கு உரிமை யல்லாதவற்றை முயன்று பாதுகாத்தாலும் தாங்காமல் போய் விடவும் கூடும்". இவை போன்றன யாவும் இயற்கையின் நிலை என்பதை உணர்ந்து நடந்தால் பலன் உண்டு. சான்றாக அனுபவிக்கக் கூடிய பொருள் கிட்டவில்லை என்றால் அதன் இயற்கை நிலையை உணர்ந்தவர்கள் அதைத் துறந்து விட்டால் அத்துன்ப உணர்வுகளிலிருந்து தப்ப முடியுமன்றோ? நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள் தீமை விளையும் போது மட்டும் மனம் கலங்குவது ஏன்? எனக் கேட்டுக் கலைஞர் "அடுத்தூர்வது அஃதொப்பதில்" என்று கூறத்தக்க விடுதலை நெறிமுறை ஒன்றையும் எடுத்துக் காட்டுகிறார். இயற்கை நிலை வலிது என்பதை உணர்வதும் உணர்ந்து அந்த அறிவை வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்வதும் கலைஞரின் நெறிமுறையாக இங்கு அமைந்துள்ளது. நெருப்பு சுடும் என்பதை அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்வதுதானே அறிவுடைமை?
5. பல்வகைச் சிறப்புகள்
கலைஞர் உரையில் பற்பல சிறப்புக் கூறுகள் காணப்படுகின்றன. அவற்றுள் சில இங்குச் சுட்டிக் காட்டப்படுகின்றன. கலைஞர் ஒரு பாவலருமாவார் ஆதலின் அவர்தம் உரைநடையிலும் பாநலம் காணப்படுவது இயல்பேயாகும். சான்றுகளாக:
அ. பா நலம்
1101.
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள.
வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம் கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு மகிழவும், முகர்ந்துண்டு மகிழவுமான ஐம்புல இன்பங்களும் நிறைந்துள்ளன.