பக்கம் எண் :

திருக்குறள்119பொருள்

60. ஊக்கம் உடைமை
 

591.

உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்

உடைய துடையரோ மற்று.

 

ஊக்கம்  உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு
எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.
 

592.

உள்ள முடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்.

 

ஊக்கம்  எனும்  ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான
உடைமை என்று கூற இயலாது.
 

593.

ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்

ஒருவந்தங் கைத்துடை யார்.

 

ஊக்கத்தை   உறுதியாகக்    கொண்டிருப்பவர்கள்,  ஆக்கம்   இழக்க
நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.
 

594.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை.

 

உயர்வு, உறுதியான  ஊக்கமுடையவர்களைத்  தேடிக்    கண்டுபிடித்து
அவர்களிடம் போய்ச் சேரும்.
 

595.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனைய துயர்வு.

 

தண்ணீரின்   அளவுதான்   அதில்  மலர்ந்துள்ள  தாமரைத் தண்டின்
அளவும்   இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின்  உயர்வு  அவர்
மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.