596. | உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது |
| தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. |
|
நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்க வேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது. |
597. | சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற் |
| பட்டுப்பா டூன்றுங் களிறு. |
|
உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள். |
598. | உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து |
| வள்ளியம் என்னுஞ் செருக்கு. |
|
அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை. |
599. | பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை |
| வெரூஉம் புலிதாக் குறின். |
|
உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான். |
600. | உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார் |
| மரமக்க ளாதலே வேறு. |
|
மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை. |