பக்கம் எண் :

திருக்குறள்123பொருள்

62. ஆள்வினை உடைமை
 

611.

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.

 

நம்மால்   முடியுமா  என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற
நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
 

612.

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை

தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு.

 

எந்தச்  செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க
வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்.
 

613.

தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே

வேளாண்மை என்னுஞ் செருக்கு.

 

பிறருக்கு   உதவி   புரியும்   பெருமித   உணர்வு,  விடா    முயற்சி
மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்.
 

614.

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை

வாளாண்மை போலக் கெடும்.

 

ஊக்கமில்லாதவர்   உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே
வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.
 

615.

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பம் துடைத்தூன்றும் தூண்.

 

தன்னலம்  விரும்பாமல், தான் மேற்கொண்ட  செயலை    நிறைவேற்ற
விரும்புகின்றவன்  தன்னைச்  சூழ்ந்துள்ள  சுற்றத்தார்,  நண்பர்கள், நாட்டு
மக்கள் ஆகிய  அனைவரின்  துன்பம்  துடைத்து, அவர்களைத் தாங்குகிற
தூணாவான்.