பக்கம் எண் :

அரசியல்124கலைஞர் உரை

616.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

 

முயற்சி   இல்லாமல்   எதுவும்   இல்லை.   முயற்சிதான்   சிறப்பான
செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.
 

617.

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளாள் தாமரையி னாள்.

 

திருமகள், மூதேவி  எனப்படும்  சொற்கள்    முறையே    முயற்சியில்
ஊக்கமுடையவரையும், முயற்சியில்  ஊக்கமற்ற  சோம்பேறியையும்  சுட்டிக்
காட்டப் பயன்படுவனவாகும்.
 

618.

பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்

தாள்வினை இன்மை பழி.

 

விதிப்பயனால்  பழி  ஏற்படும்  என்பது தவறு, அறிய வேண்டியவற்றை
அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.
 

619.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.

 

கடவுளே   என்று  கூவி   அழைப்பதால்  நடக்காத  காரியம் ஒருவர்
முயற்சியுடன் உழைக்கும்போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.
 

620.

ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்

தாழா துஞற்று பவர்.

 

"ஊழ்" என்பது வெல்ல முடியாத ஒன்று  என்பார்கள். சோர்வில்லாமல்
முயற்சி   மேற்கொள்பவர்கள்  அந்த  ஊழையும்   தோல்வி    அடையச்
செய்வார்கள்.