பக்கம் எண் :

திருக்குறள்125பொருள்

63. இடுக்கண் அழியாமை
 

621.

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வ தஃதொப்ப தில்.

 

சோதனைகளை  எதிர்த்து  வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக்
கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.
 

622.

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும்.

 

வெள்ளம்போல்   துன்பம்  வந்தாலும்  அதனை  வெல்லும் வழி யாது
என்பதை    அறிவுடையவர்கள்  நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம்
விலகி ஓடி விடும்.
 

623.

இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்

கிடும்பை படாஅ தவர்.

 

துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே
துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.
 

624.

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பா டுடைத்து.

 

தடங்கல்   நிறைந்த  கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது
இழுத்துக்   கொண்டு  போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால்
துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்.
 

625.

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற

இடுக்கண் இடுக்கட் படும்.

 

துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள்,
துன்பப்பட்டு அழிந்து விடும்.