64. அமைச்சு |
631. | கருவியும் காலமும் செய்கையும் செய்யும் |
| அருவினையும் மாண்ட தமைச்சு. |
|
உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்து செயல்படுபவனே சிறந்த அமைச்சன். |
632. | வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ |
| டைந்துடன் மாண்ட தமைச்சு. |
|
அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும். |
633. | பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் |
| பொருத்தலும் வல்ல தமைச்சு. |
|
அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும். |
634. | தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச் |
| சொல்லலும் வல்ல தமைச்சு. |
|
ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈடுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும். |
635. | அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந் |
| திறனறிந்தான் தேர்ச்சித் துணை. |
|
அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும். செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும். |