646. | வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல் |
| மாட்சியின் மாசற்றார் கோள். |
|
மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துகளைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும். |
647. | சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை |
| இகல்வெல்லல் யார்க்கும் அரிது. |
|
சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது. |
648. | விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது |
| சொல்லுதல் வல்லார்ப் பெறின். |
|
வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துகளைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள். |
649. | பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற |
| சிலசொல்லல் தேற்றா தவர். |
|
குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள். |
650. | இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்ற |
| துணர விரிந்துரையா தார். |
|
கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர். |