பக்கம் எண் :

அமைச்சியல்132கலைஞர் உரை

656.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை.

 

பசியால்  துடிக்கும்  தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட
இழிவான செயலில் ஈடுபடக் கூடாது.
 

657.

பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்

கழிநல் குரவே தலை.

 

பழிக்கு   அஞ்சாமல்  இழிவான   செயல்களைப் புரிந்து செல்வந்தராக
வாழ்வதைவிட,   கொடிய    வறுமை   தாக்கினாலும்    கவலைப்படாமல்
நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.
 

658.

கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்

முடிந்தாலும் பீழை தரும்.

 

தகாதவை    என    ஒதுக்கப்பட்ட    செயல்களை   ஒதுக்கிவிடாமல்
செய்பவர்களுக்கு   ஒருவேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே
ஏற்படும்.
 

659.

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பா லவை.

 

பிறர் அழத் திரட்டிய செல்வம்  அழ  அழப்  போய்விடும். நல்வழியில்
வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்.
 

660.

சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்

கலத்துணீர் பெய்திரீஇ யற்று.

 

தவறான    வழிகளில்    பொருளைச்   சேர்த்து  அதைக்  காப்பாற்ற
நினைப்பது, பச்சை மண்ணால்  செய்யப்பட்ட  பாத்திரத்தில்  நீரை ஊற்றி,
அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்.