பக்கம் எண் :

திருக்குறள்133பொருள்

67. வினைத்திட்பம்
 

661.

வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற.

 

மற்றவை   எல்லாம்   இருந்தும்   ஒருவரது  மனத்தில் உறுதி மட்டும்
இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.
 

662.

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்

ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.

 

இடையூறு  வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து
விடுமேயானால்  மனம்   தளராது   இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே
அறிவுடையோர் கொள்கையாம்.
 

663.

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்

எற்றா விழுமந் தரும்.

 

செய்து     முடிக்கும்     வரையில்       ஒரு      செயலைப்பற்றி
வெளிப்படுத்தாமலிருப்பதே   செயலாற்றும்  உறுதி  எனப்படும். இடையில்
வெளியே  தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு
இடையூறு ஏற்படக்கூடும்.
 

664.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.

 

சொல்லுவது    எல்லோருக்கும்   எளிது;   சொல்லியதைச்    செய்து
முடிப்பதுதான் கடினம்.
 

665.

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்

ஊறெய்தி உள்ளப் படும்.

 

செயல்    திறனால்  சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத்திட்பமானது,
ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும்.