68. வினை செயல்வகை |
671. | சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு |
| தாழ்ச்சியுள் தங்குதல் தீது. |
|
ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும். முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும். |
672. | தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க |
| தூங்காது செய்யும் வினை. |
|
நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது. |
673. | ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் |
| செல்லும்வாய் நோக்கிச் செயல். |
|
இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும். |
674. | வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால் |
| தீயெச்சம் போலத் தெறும். |
|
ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும். |
675. | பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும் |
| இருள்தீர எண்ணிச் செயல். |
|
ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். |