பக்கம் எண் :

திருக்குறள்137பொருள்

69. தூது
 

681.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்

பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

 

அன்பான    குணமும்,     புகழ்வாய்ந்த   குடிப்பிறப்பும்,   அரசினர்
பாராட்டக்கூடிய    நல்ல   பண்பாடும்    பெற்றிருப்பதே   தூதருக்குரிய
தகுதிகளாகும்.
 

682.

அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்

கின்றி யமையாத மூன்று.

 

தூது    செல்பவருக்குத்  தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள்
அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை.
 

683.

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்

வென்றி வினையுரைப்பான் பண்பு.

 

வேற்று    நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும்   வண்ணம்
செய்தி    உரைத்திடும்   தூதுவன்,    நூலாய்ந்து   அறிந்தவர்களிலேயே
வல்லவனாக இருத்தல் வேண்டும்.
 

684.

அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்

செறிவுடையான் செல்க வினைக்கு.

 

தூது  உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு,
ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய  மூன்றும்    நிறைந்தவராக    இருத்தல்
வேண்டும்.
 

685.

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி

நன்றி பயப்பதாந் தூது.

 

சினத்தைத்  தூண்டாமல்   மகிழத்தக்க    அளவுக்குச்  செய்திகளைத்
தொகுத்தும், தேவையற்ற  செய்திகளை   ஒதுக்கியும்,  நல்ல  பயனளிக்கும்
விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும்.