பக்கம் எண் :

அமைச்சியல்140கலைஞர் உரை

696.

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில்

வேண்டுப வேட்பச் சொலல்.

 

ஒருவரின்   மனநிலை  எவ்வாறு  உள்ளது   என்பதை அறிந்து, தக்க
காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்  குரியவைகளை  விலக்கி, விரும்பத்
தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும்.
 

697.

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்

கேட்பினும் சொல்லா விடல்.

 

விரும்பிக்   கேட்டாலும்   கூட, பயனுள்ளவற்றை மட்டுமே  சொல்லிப்
பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.
 

698.

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற

ஒளியோ டொழுகப் படும்.

 

எமக்கு  இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று
ஆட்சிப்    பொறுப்பில்   இருப்போரை   இகழ்ந்துரைக்காமல், அவர்கள்
அடைந்துள்ள பெருமைக் கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
 

699.

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்

துளக்கற்ற காட்சி யவர்.

 

ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே  என்ற  துணிவில்,
ஏற்றுக்கொள்ள முடியாத   காரியங்களைத்   தெளிந்த  அறிவுடையவர்கள்
செய்ய மாட்டார்கள்.
 

700.

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்

கெழுதகைமை கேடு தரும்.

 

நெடுங்காலமாக    நெருங்கிப்    பழகுகிற  காரணத்தினாலேயே தகாத
செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும்.