71. குறிப்பறிதல் |
701. | கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் |
| மாறாநீர் வையக் கணி. |
|
ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கு அணியாவான். |
702. | ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் |
| தெய்வத்தோ டொப்பக் கொளல். |
|
ஒருவன் மனத்தில் உள்ளதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம். |
703. | குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் |
| யாது கொடுத்துங் கொளல். |
|
ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ள வேண்டும். |
704. | குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை |
| உறுப்போ ரனையரால் வேறு. |
|
உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள். |
705. | குறிப்பிற் குறிப்புணரா ஆயின் உறுப்பினுள் |
| என்ன பயத்தவோ கண். |
|
ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டி விடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாத கண்கள் இருந்தும் என்ன பயன்? |