72. அவை அறிதல் |
711. | அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் |
| தொகையறிந்த தூய்மை யவர். |
|
ஒவ்வொரு சொல்லின் தன்மையையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள். |
712. | இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் |
| நடைதெரிந்த நன்மை யவர். |
|
சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும். |
713. | அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் |
| வகையறியார் வல்லதூஉம் இல். |
|
அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன் படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது. |
714. | ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் |
| வான்சுதை வண்ணங் கொளல். |
|
அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும். |
715. | நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள் |
| முந்து கிளவாச் செறிவு. |
|
அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும். |