73. அவை அஞ்சாமை |
721. | வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் |
| தொகையறிந்த தூய்மை யவர். |
|
சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள். |
722. | கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் |
| கற்ற செலச்சொல்லு வார். |
|
கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார். |
723. | பகையகத்துச் சாவார் எளியர் அரியர் |
| அவையகத் தஞ்சா தவர். |
|
அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர். |
724. | கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற |
| மிக்காருள் மிக்க கொளல். |
|
அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும். |
725. | ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா |
| மாற்றங் கொடுத்தற் பொருட்டு. |
|
அவையில் பேசும்பொழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும். |