75. அரண் |
741. | ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் |
| போற்று பவர்க்கும் பொருள். |
|
பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும். |
742. | மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் |
| காடும் உடைய தரண். |
|
ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும். |
743. | உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின் |
| அமைவரண் என்றுரைக்கும் நூல். |
|
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும். |
744. | சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை |
| ஊக்கம் அழிப்ப தரண். |
|
உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும். |
745. | கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் |
| நிலைக்கெளிதாம் நீர தரண். |
|
முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும். |