பக்கம் எண் :

திருக்குறள்151பொருள்

76. பொருள் செயல்வகை
 

751.

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள்.
 

மதிக்கத்  தகாதவர்களையும்  மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது
அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
 

752.

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு.
 

பொருள்  உள்ளவர்களைப்  புகழ்ந்து  போற்றுவதும்  இல்லாதவர்களை
இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது.
 

753.

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று.
 

பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால்
நினைத்த  இடத்துக்குச் சென்று இருள் என்னும்  துன்பத்தைத் துரத்தி விட
முடிகிறது.
 

754.

அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்.
 

தீய வழியை  மேற்கொண்டு திரட்டப்படாத  செல்வம்தான்  ஒருவருக்கு
அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்.
 

755.

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

புல்லார் புரள விடல்.
 

பெரும்  செல்வமாக  இருப்பினும்  அது  அருள்  நெறியிலோ  அன்பு
வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும்.