78. படைச் செருக்கு |
771. | என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை |
| முன்னின்று கல்நின் றவர். |
|
போர்க்களத்து வீரன் ஒருவன், "பகைவர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்" என முழங்குகிறான். |
772. | கான முயலெய்த அம்பினில் யானை |
| பிழைத்தவேல் ஏந்தல் இனிது |
|
வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறி தப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது. |
773. | பேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால் |
| ஊராண்மை மற்றதன் எஃகு. |
|
பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும். அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும். |
774. | கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் |
| மெய்வேல் பறியா நகும். |
|
கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான். |
775. | விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் |
| ஓட்டன்றோ வன்க ணவர்க்கு. |
|
களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்கு ஒப்பாகும். |