பக்கம் எண் :

திருக்குறள்157பொருள்

79. நட்பு
 

781.

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு.
 

நட்புக்  கொள்வது  போன்ற  அரிய   செயல்   இல்லை.  அதுபோல்
பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.
 

782.

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்னீர பேதையார் நட்பு.
 

அறிவுள்ளவர்களுடன்  கொள்ளும்   நட்பு  பிறைநிலவாகத்  தொடங்கி
முழுநிலவாக   வளரும்.   அறிவில்லாதவர்களுடன்  கொள்ளும்   நட்போ
முழுமதிபோல் முளைத்துப் பின்னர்  தேய்பிறையாகக்  குறைந்து  மறைந்து
போகும்.
 

783.

நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு.
 

படிக்க படிக்க  இன்பம்  தரும்  நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக
இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.
 

784.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென் றிடித்தற் பொருட்டு.
 

நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச்
செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்.
 

785.

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாங் கிழமை தரும்.
 

இருவருக்கிடையே  நட்புரிமை  முகிழ்ப்பதற்கு  ஏற்கனவே  தொடர்பும்
பழக்கமும்  வேண்டுமென்பதில்லை.  இருவரின்  ஒத்த   மன   உணர்வே
போதுமானது.