786. | முகநக நட்பது நட்பன்று நெஞ்சத் |
| தகநக நட்பது நட்பு. |
|
இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல: இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும். |
787. | அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண் |
| அல்லல் உழப்பதாம் நட்பு. |
|
நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும். |
788. | உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே |
| இடுக்கண் களைவதாம் நட்பு. |
|
அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்துச் செல்வதே நட்புக்கு இலக்கணமாகும். |
789. | நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி |
| ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. |
|
மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும். |
790. | இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று |
| புனையினும் புல்லென்னும் நட்பு. |
|
நண்பர்கள் ஒருவருக்கொருவர் "இவர் எமக்கு இத்தன்மையுடையவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்" என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும். |