பக்கம் எண் :

திருக்குறள்161பொருள்

81. பழைமை
 

801.

பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்

கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
 

பழைமை  பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின்
உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.
 

802.

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்

குப்பாதல் சான்றோர் கடன்.
 

பழைமையான      நண்பர்களின்      உரிமையைப்     பாராட்டுகிற
சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்.
 

803.

பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை

செய்தாங் கமையாக் கடை.
 

பழைய  நண்பர்கள்   உரிமையோடு  செய்த  காரியங்களைத்   தாமே
செய்ததுபோல  உடன்பட்டு  இருக்காவிட்டால்,  அதுவரை  பழகிய  நட்பு
பயனற்றுப் போகும்.
 

804.

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்

கேளாது நட்டார் செயின்.
 

பழகிய  நட்பின்   உரிமை  காரணமாகத்   தமது  நண்பர்   தம்மைக்
கேளாமலே ஒரு  செயல்  புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர்
அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்.
 

805.

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க

நோதக்க நட்டார் செயின்.
 

வருந்தக்   கூடிய     செயலை     நண்பர்கள்    செய்தால்    அது
அறியாமையினாலோ அல்லது  உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது
என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.