பக்கம் எண் :

திருக்குறள்167பொருள்

84.பேதைமை
 

831.

பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்

டூதியம் போக விடல்.
 

கேடு   விளைவிப்பது   எது?   நன்மை   தருவது    எது?   என்று
தெளிவடையாமல்  நன்மையை  விடுத்துத்  தீமையை நாடுவதே பேதைமை
என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.
 

832.

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை

கையல்ல தன்கண் செயல்.
 

தன்னால்  இயலாத  செயல்களை  விரும்பி,  அவற்றில்  தலையிடுவது
என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்.
 

833.

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்

பேணாமை பேதை தொழில்.
 

வெட்கப்பட  வேண்டியதற்கு  வெட்கப்படாமலும்,  தேடவேண்டியதைத்
தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும்,
பேணிப்  பாதுகாக்கப்பட  வேண்டியவற்றைப்  பாதுகாக்காமலும்  இருப்பது
பேதைகளின் இயல்பாகும்.
 

834.

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையிற் பேதையார் இல்.
 

படித்தும்,   படித்ததை    உணர்ந்தும்,    உணர்ந்ததைப்    பலருக்கு
உணர்த்திடவும்     கூடியவர்கள்,     தாங்கள்    மட்டும்     அவ்வாறு
நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது.
 

835.

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

தான்புக் கழுந்தும் அளறு.
 

தன்னிச்சையாகச்  செயல்படும்  பேதை, எக் காலத்திலும்  துன்பமெனும்
சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்.